Monday, 11 March 2019

அபூர்வ பெண்மணி.. வயது 116

உலகில் உயிருடன் வாழும் வயதானவர்கள் பற்றிய விபரங்கள் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று வருகிறது.


அந்தவகையில், தற்போது ஜப்பானைச் சேர்ந்த 116 வயதான மூதாட்டி, உலகின் மிக வயதான பெண்மணியாக, கின்னஸ் உலக சாதனை குழுவினரால் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.



காநே பாட்டி;


அப்பாட்டியின் பெயர் காநே டானாகா ஆகும். இவர் ஜப்பானின் தென் பகுதியில் உள்ள ஃபுகுஓகா நகரில் வசித்து வருகிறார். கடந்த 1903ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 2ஆம் தேதி பிறந்தவர் இவர். அந்த ஆண்டு தான் ரைட் சகோதரர்கள் முதன்முறையாக விமானத்தை வானில் பறக்கவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


116வது பிறந்தநாள்:


காநே கடந்த ஜனவரி மாதம் தனது 116ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இவரது பிறந்த தினம் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், கின்னஸ் உலக சாதனை குழு, அவரை உலகின் மிக வயதான பெண்மணியாக அறிவித்துள்ளது. அதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து காநே பெற்றுக் கொண்டார்.


மறக்க முடியாத தருணம்:


'தனது வாழ்நாளில் இது தான் மறக்க முடியாத தருணம்' என கின்னஸ் சான்றிதழ் பெற்றது குறித்து காநே தெரிவித்துள்ளார். கின்னஸ் சான்றிதழ் பெற்ற நிகழ்வை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கேக் வெட்டி அவர் கொண்டாடினார்.


பிடித்தமான பொழுதுபோக்கு:


116 வயதான போதும் மற்றவர்கள் உதவியின்றி, நகரும் நாற்காலியை பிடித்தவாறு, நடந்து செல்கிறார் காநே. கணிதப் புதிர்கள் மற்றும் அமர்ந்தபடியே விளையாடும் விளையாட்டுகள் காநேவுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காக உள்ளது.


குடும்பம்:


கடந்த 1922ம் ஆண்டு காநேவுக்கு திருமணமானது. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவர், ஐந்தாவதாக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்துள்ளார். தினமும் காலையில் ஆறு மணிக்கே எழுந்துவிடும் பழக்கம் கொண்ட காநே, ஓய்வு நேரங்களில் கணிதப் புதிர்களை விடுவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.


அதிக வயதானவர்கள்:


இது ஒருபுறம் இருக்க, அதிக வயதானவர்கள் வாழும் நாடாக ஜப்பான் உள்ளது. ஏற்கனவே கின்னஸ் சாதனை புரிந்த வயதானவர்கள் பலர் அங்கு வாழ்ந்தனர். தற்போது காநே மூலம் மீண்டும் உலகின் வயதான பெண்மணி வாழும் நாடு என்ற சிறப்பை ஜப்பான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

காமராஜர் பற்றிய நூறு செய்திகள்

#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...