Thursday, 14 March 2019

பெண் என்பவள் ஒரு சகாப்தம்

வார்த்தைகள் கூட இல்லை இவர்களைத் திட்டுவதற்கு பொள்ளாச்சியில் மட்டும் அல்ல இன்னும் எத்தனையோ இடங்களில் என்னை விட்டுடுங்க உன்னை நம்பித்தானே வந்தேன் என்ற வார்த்தைகள் காற்றோடு காற்றாக தினம் தினம் கலந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் அலட்சியம்தான் ஏழு ஆண்டுகள் நடைபெற்றிருக்கும் இந்த வெறிச்செயல் பற்றி ஒருமுறை கூடவா அக்கம் பக்கத்தினருக்கோ காவல்துறைக்கோ தெரிந்திருக்காமல் போயிருக்கும். நம் வீட்டுப்பிள்ளைகளுக்கு நடக்காதவரை பக்கத்து வீடுதானே பற்றியெறிகிறது நம் வீடு இல்லையே என்ற அலட்சிய மனப்பான்மை தானே இதற்கு காரணம்




ஜல்லிக்கட்டின் போது நமது இளைஞர்கள் காட்டிய அக்கறை, விவேகம் நள்ளிரவில் போராட்டத்தின் போது பெண்பிள்ளைளுக்கு கொடுத்த பாதுகாப்பு அந்த இளைஞர்கள் இப்போது எங்கே போனார்கள். மீண்டும் அதே போல் ஒற்றுமை கலந்த ஒரு போராட்டத்தை கையில் எடுக்கவேண்டும். ஒரு கல்லூரியில் மாணவர்கள் விடுப்பு எடுத்து போராடினாலோ, நம் கண்டனத்தை ஒரு வீடியோவின் மூலம் பதிவு செய்வதாலோ அல்லது டிபெட் நிகழ்வுகளினாலோ இதற்கு அழுத்தம் மட்டும் தான் நம்மால் கொடுக்க முடியும், ஆனால் இதற்கு அழுத்தம் தேவையில்லை நம் பெண்பிள்ளைகளை அழிக்க அவனுக்கு இருந்த மூர்க்க குணம் அந்த பொறுக்கிகளை சித்திரவதை செய்வதில் இருக்க வேண்டும்.


மீண்டும் மீண்டும் அந்த சதை வெறிப்பிடித்த ஒநாய்களின் முகங்களை பார்க்கும்போது ஒரு அன்னையாய் மனம் பதறுகிறது, நக்குகிற நாய்களுக்கு செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது. தன் வீட்டில் சகோதரி தாய் என்ற இருபெண்களை வைத்துக்கொண்டும் இன்னொரு பெண்ணின் நிர்வாணத்தை கூட்டத்தோடு கூட்டமாய் ரசிக்கத் துணியும் அவன் மிருகத்திற்கும் கூட கீழானவன். மிருகங்கள் தங்கள் வயிற்றுப்பசிக்கு மட்டுமே இரை தேடுகிறது. அதற்கென சில இடங்கள் இருக்கிறதே சென்று தொலையவேண்டியதுதானே....




வலிமையான சட்டத்தின் கரங்களுக்குள் தான் இவர்கள் அகப்படவேண்டும் வெறும் கண்கட்டு வித்தைகளாய் அவர்களை அடிப்பதையும் திட்டுவதையும் வீடியோ எடுத்து போடுவதை விடுங்கள், விசாரிக்கும் ஒவ்வொரு அதிகாரியும் சிறைபட்ட அந்த பெண்ணின் கதறல்களை நினைவிற்கொண்டு அடித்து நொறுக்குங்கள் ஒரே அடியில் ஒரு துப்பாக்கிகுண்டுக்கு அவன் இறக்கக்கூடாது அனு அனுவாய் சித்திரவதை செய்யுங்கள் உறுப்புகளை வெட்டி வீசுங்கள். எந்த கண்கள் ரசித்ததோ அதை குருடாக்குங்கள். நீதியரசர் கிருபாகரன், சைலேந்திரபாபு போன்று எத்தனையோ நல்ல அதிகாரிகள் நீதியரசர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கைகளில் ஒப்படையுங்கள் இல்லையெனில் நடுரோட்டில் மக்களிடம் விடுங்கள் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் இந்த வக்கிரம் பிடித்த கொடியவர்களை.


ஒரு தரம் உணவு வைத்தாலே காலைச் சுற்றி நன்றியுரைக்கும் நாய்க்கு இவர்கள் இணையானவர்கள் இல்லை, தன் மகனின் மேல் தவறே இல்லையென்று வாதிடும் அந்த பொறுக்கியின் தாய் இரத்தம் குடிக்கும் டிராகுலாக்களைவிட இவர்கள் கொடுமையானவர்கள். அந்த பண்ணைவீட்டின் புகைப்படம் வெளியாகி இருந்தது. அப்படியொன்றும் அடைபட்ட இடமாக தெரியவில்லை. அதை சுற்றி நிறைய குடியானவர்கள் இருந்திருக்கிறார்கள். யாருக்கும் ஒரு சந்தேகமோ பொறியோ தட்டவில்லை என்பது கவலைக்குரிய விஷயமே. விசாரிக்கப் போயிருந்தவர்களுக்கு யாரும் அந்த வீட்டைக் காட்டிக்கொடுக்க கூட முன்வரவில்லையாம் எனக்குத் தெரியாது உனக்கு தெரியாது என்றுதான் பேசியிருக்கிறார்கள். 45 வயதான ஒருவர் மட்டும் தன் பெயர் வெளியிட விரும்பாமல் அந்த வீட்டையும் காண்பித்து அடிக்கடி இரண்டு மூன்று கார்கள் வரும் அதிலிருந்த அந்தப்பையன்கள் வருவார்கள் ஏதோ பிரண்ட்ஸ்ஸோட குடிக்கிறார்கள் என்று நினைத்தோம். இப்படியொரு காமக் கொடூரம் நடக்கும் என்றும் எங்கள் முதுகிற்கு பின்னாலேயே அரங்கேறிய கொடூரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இதே போல் சாலை வழியாக ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்து காரை விட்டு வெளியேறிய அவளை அடித்து துன்புறுத்தி வண்டியில் ஏற்றியது ஒரு பெரியவர் தன் மொபைலில் படம் பிடிக்க முயன்று பதட்டத்தில் ஆன் பட்டனை செயல் படுத்தாமல் விட்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.




நிறைய ஆதாரங்களை கொண்டுபோய் கொடுத்த போது கூட மெளனம் காத்த அந்த காவல் அதிகாரி சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆபத்துதவியாய் காப்பாற்றியவர்களா யாரோ ஒரு பெரியவரின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டு இருக்கப்போகிறார்கள். பணம் படைத்தவர்களுக்கும், உடல் வலிமை படைத்தவர்களுக்கு மட்டும்தான் உலகத்தில் வாழ தகுதியிருக்கிறதா என்ன ?!


பெண்களே நம் சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாய் பறிபோய்கொண்டு இருக்கிறது. ஆனால் சில நம்பிக்கைகளை தகர்த்து எறியுங்கள் காதலியுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை அவன் கூப்பிடறான்னு தனிமையில் சந்திக்காதீர்கள். உங்கள் அங்கங்களை தொட அனுமதிக்காதீர்கள். ஏதோவொரு எதிர்பார்ப்பிற்கென பழகும் அந்த அன்பு இப்படி சந்தியில் தான் கொண்டு போய்விடும். தைரியத்துடன் எதிர்க்கொள்ளுங்கள் மகாத்மா சொன்னதைப்போல கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்டது அல்ல இன்னும் பெண்களுக்காக குரல் கொடுக்கும் யாரும் கற்பை நமக்கு மட்டும் என்று சொல்வதில்லை அது மனம் சம்பந்தப்பட்டது.




நம் சதைகளை விலைக்கு விற்று நிர்வாணத்தை படம் பிடித்து பிழைப்பு நடத்துவதால் அசிங்கமும் அவமானமும் அவர்களுக்குத்தான். அதனால் கவலை கொள்ளாதீர்கள். நான்கைந்து பேரால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு அது இழப்பு இல்லை தன் உடல் பலத்தால் தன்னைவிடவும் நலிந்தவர்களை மோசம் செய்யும் அந்த வெறியர்களுக்குத்தான் இழப்பு, விட்டுவிடுங்கள் தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு வெளியே வாருங்கள் இந்த காமாந்திரகாரர்களின் முகத்தில் காரித்துப்பிட, எனக்கு இப்படி நடந்துவிட்டதே என்று மூலையில் அமராதீர்கள் வெறும் உடலும் யோனியும் மார்பகமும் மட்டும் பெண் அல்ல, அவள் தனிப்பெரும் ஜோதி.


அருமைபெருமையாய் வளர்ப்பது நீங்கள் காதல், நட்பு, டேட்டிங் என்ற பெயரில் பெற்றோரை ஏமாற்றிட அல்ல, உன்னை நம்பித்தானே வந்தேன் என்ற அந்த பெண் பிள்ளையின் கதறலில் அந்த நம்பிக்கைக்கு அவன் தீங்கு இழைத்துவிட்டான் என்ற வேதனை நெஞ்சில் அறைகிறது. உங்கள் காதலனையோ நண்பனையோ தனிமையில் சந்திக்காதீர்கள் நாலுபேர் முன்னிலையில் உரையாட அனுமதியுங்கள். செல்பி மோகத்தால் இன்று எத்தனையோ பெண்களில் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்படுகிறது. சந்தானம் சொன்னதைப்போல இரவல் பைக்கும் ஐந்து ரூபாய்க்கு அயர்ன் பண்ண சட்டையும் உனக்காக எதையும் செய்வேன் என்ற அவனின் காதல் வசனங்களும் உங்களை விசனப்படுத்திடக் கூடாது. தவறோ சரியோ எதையும் பெற்றோரிடம் சொல்லிவிடுங்கள்



பிள்ளைகளே உங்கள் பெற்றவர்களோடு நேரம் செலவிடுங்கள் நம்மிடம் கிடைக்காத அன்பா அவர்களுக்கு வெளியில் கிடைத்துவிடப்போகிறது. அவர்களுக்காக சம்பாதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களை இழந்துவிடாதீர்கள். பெண்மையைக் காப்போம் அவர்களுக்கு அரணாய் நாங்கள் இருப்போம் என்று உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லி வளருங்கள். மகளிர் தினத்தை நான்கு சுவர்களுக்குள் கொண்டாடி நம்மைநாமே பாராட்டிக்கொள்ளுவதைக் காட்டிலும் ஆண்களுக்கு அவர்களின் அருமையைப் புரிய வையுங்கள் ஆண் பிள்ளைகளின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆவணப்படத்தை போடும் போது வரலாற்றையும், அரசியலையும் காட்டுவதைப் போல ஒரு பெண் தன் பிள்ளையை ஈன்றெடுக்கும் வீடியோவைக் காட்டுங்கள் அவனுக்கு அவளை துன்புறுத்தும் எண்ணம் வராது, இந்த காமாந்திர ஒநாய்களின் பற்களையும் உயிரையும் குடிக்கும் வரை நம் கூக்குரல்கள் ஓயக்கூடாது.


நம்மை திசை திருப்ப இனியும் ஒரு பீப்பாடலையோ, முட்டாள் செய்திகளையோ கைக்கூலிகள் பெரிசு படுத்துவார்கள் அதையெல்லாம் அலட்சியம் செய்யுங்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கூக்குரல் இதற்கும் வீறுகொண்டு ஒலிக்கட்டும்.


No comments:

Post a Comment

காமராஜர் பற்றிய நூறு செய்திகள்

#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...